நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக வெற்றிபெற்று, தன்னுடன் சேர்த்து 32 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
இந்த அமைச்சரவையில் ஆதிராவிடர் ஒருவருக்கும் இடமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.
அந்த ஆதங்கத்துடன் அவர் கூடுதலாகத் தெரிவித்துள்ள கூற்றுதான் இப்போது கூடுதல் கேள்விகளை எழுப்புகிறது.
தலித்துகளுக்கு 3 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே கல்லில் 3 மாங்காய் என்பதுபோல், பெஞ்சமின் என்கிற தலித் கிறிஸ்தவர் உட்பட 3 தலித்துகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்க்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
மேற்கூறியுள்ள அவர் கூற்றில் பின்வரும் கேள்விகள் எழும்புகின்றன.
ஆதிதிராவிடர் என்பவர் தலித் இல்லையா? அல்லது
தலித் என்ற வரையறைக்குள் ஆதிதிராவிடர் என்பவர் இடம் பெறவில்லையா?
தலித்துகளின் தலைவராகச் செயல்பட திருமாவளவன் விரும்புகிறாரா? அல்லது ஆதிதிராவிடர்களின் தலைவராகச் செயல்பட விரும்புகிறாரா?
தலித்துகள் வேறு ஆதிதிராவிடர்கள் வேறா? அல்லது தலித்துகளும் ஆதிதிராவிடர்களும் ஒன்றா?
மேற்படி குழப்பமான கேள்விகளுக்குக் காரணம் என்ன?
தலித் என்ற சொல்தான்.
தனது தமிழ் மொழிப் பற்று காரணமாகத் தன் கட்சியினர் அனைவரும் தமிழில் பெயர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மாபெரும் புரட்சியை முன்னின்று நடத்தியவர் திருமாவளவன். மகனுக்குத் தந்தை பெயர் வைக்கும் இலக்கணத்தை மாற்றி, தனது தந்தைக்கே தொல்காப்பியன் என்று பெயர் வைத்தவர் திருமாவளவன்.
தனிமனிதப் பெயர்கள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பும் திருமாவளவன், தனது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பெயரையே அந்நிய மொழியில் அடையாளப்படுத்த தலித் என்ற சொல்லை ஆதரிப்பது மிகவும் முரணான ஒன்று.
தலித் என்கிற சொல் மராட்டிய மொழிக்கு உரியது என்று சொல்லப்படுகிறது. தலித் என்று சொன்னால் ஒடுக்கப்பட்டவர் என்று பொருள் படுகிறது. ஒடுக்கப்பட்டவர் என்ற சொல்லுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் கொண்டுவரப்பட வேண்டியதில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், முற்பட்டவர்களில் வசதியற்றவர் அனைவரும், ஒடுக்கப்பட்டவர்கள் என்ற சொல்லுக்குள் கொண்டுவரப்படலாம்.
ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் பட்டியல்வகுப்பினர் பட்டியல்பழங்குடியினரைக் குறிக்கும் சொல்லாகத் தமிழில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் தாழ்ந்தவர்கள் என்ற பொருளில் வராது. பிறரால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற செயப்பாட்டு வினை பொருள் படும்.
அந்தத் தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லில் வரலாறு பொதிந்திருக்கிறது. எளிதில் புரியக்கூடியது. தாய்மொழியில் நேரிடையாகப் பொருளை உணரச் செய்கிறது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், முற்பட்டவர்கள் ஆகிய சொற்களே சமூக நீதி வரலாற்றை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று நேரிடையாகப் பொருள் தரும் தமிழ்ச் சொல்லைப் புறக்கணித்துவிட்டு, புரியாத குழப்பம் தரக்கூடிய தலித் என்கிற அந்நிய மொழியைத் தமிழகத்தில் திணிப்பதற்குக் காரணம் என்ன?
இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்கள், அணுகக்கூடாதவர்கள், தொடக்கூடாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரையும் எந்தப் பொதுச் சொல்லில் அழைப்பது என்ற வினா எழுந்தபோது, ஹரிஜன் என்ற சொல்லை காந்தியடிகள் மொழிந்தார்.
ஆனால், அம்பேத்கர் இந்தச் சொல்லை ஏற்கவில்லை. ஹரிஜன் என்று சொன்னால் கடவுளின் குழந்தைகள் என்று பொருள்படும்.
தாழ்த்தப்பட்டவர்கள் யாவரும் கடவுளின் குழந்தைகளாகப் பிற ஜாதியினரால் போற்றப்படுவதில்லை. எனவே, பொய்யான புகழ்மொழிச் சொல்லால் அழைக்கப்படுவது என்பது வரலாற்றை திசை திருப்பும் செயல் என்று அம்பேத்கர் கூறினார்.
கடவுளின் குழந்தைகள் என்று அழைப்பது என்பது பரிதாபத்தைத் தரக்கூடிய பொருளையும் தருகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வித பரிதாபத்துக்கும் உரியவர்களாகத் தொடர்ந்து வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அம்பேத்கர் அந்தச் சொல்லை எதிர்த்தார்.
இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்கள் பழங்குடியினரில் 700-க்கும் மேற்பட்ட உட்ஜாதிப் பெயர் பிரிவினராகவும், பிறர் 1200-க்கும் மேற்பட்ட உட்ஜாதிப் பெயர் பிரிவினராகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, இத்தனை பிரிவினரையும் உள்ளடக்க, பட்டியல்வகுப்பினர் பட்டியல்பழங்குடியினர் (Scheduled Castes and Scheduled Tribes) என்ற சொல்லே பொருத்தமானது என்று அம்பேத்கர் கருதினார்.
எனவே, பட்டியல்வகுப்பினர் - பட்டியல்பழங்குடியினர் என்ற சொல்லையே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இடம்பெறச் செய்தார்.
தாழ்த்தப்பட்டவர்கள் என்று பட்டியலிடப்பட்ட யாவரும் ஒற்றுமையாக இருப்பதற்கும் ஒருங்கிணைவதற்கும் SC/ST என்ற சொல்லே சரியானது என்று அம்பேத்கர் தீர்மானமாக முடிவு செய்துள்ளார்.
இந்த SC/ST என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால், பட்டியல்வகுப்பினர் பட்டியல்பழங்குடியினர் என்ற பொருளைத் தருகிறது.
இந்தப் பிரிவினர் ஏன் பட்டியலிடப்பட்டார்கள் என்று சொன்னால், இவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளை எளிதில் புரியவைக்க முடியும்.
பட்டியல்வகுப்பினர் என்பவர்கள் இந்து மதத்திலும் புத்தமதத்திலும் மட்டுமே இருக்கமுடியும். பட்டியல்பழங்குடியினர் மட்டும் தாங்கள் விரும்புகிற மதத்தில் இருக்கலாம். இதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது.
இந்த நிலையில்தான், ‘தலித்’ என்ற சொல்லைக்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.
பட்டியல்வகுப்பினர் ஒருவர் இந்து மதத்தைவிட்டு விலகி புத்தமதத்தில் சேர்ந்துவிட்டால், அவர் பட்டியல்வகுப்பினராகவே தொடர்வார். ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்துக்கோ முஸ்லிம் மதத்துக்கோ மாறிவிட்டால், பட்டியல்வகுப்பினர் என்ற பட்டியலில் தொடரமுடியாது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குள் சென்றுவிடுவார்.
கிறிஸ்தவ மதத்துக்கும் முஸ்லிம் மதத்துக்கும் மாறுபவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ, பட்டியல்வகுப்பினர் என்றோ சொல்லமுடியாது என்பதால்தான், வசதியாக தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
கிறிஸ்தவ மதத்துக்கும் முஸ்லிம் மதத்துக்கும் மதம் மாறிச் செல்பவர்கள், இந்து மதத்தில் உள்ள பட்டியல்வகுப்பினருக்கும் பட்டியல்பழங்குடியினருக்கும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் பயனைப் பெறமுடியாது. இதற்கு, பட்டியல்வகுப்பினர் என்ற சொல் தடையாக இருக்கிறது. இந்தத் தடையைத் தகர்ப்பதற்குத்தான், தலித் என்ற சொல்லைத் திணிக்கிறார்கள் என்றும் கருதவேண்டி உள்ளது.
இங்கு, ஆதிதிராவிடர் என்ற சொல் எங்கிருக்கிறது என்பதையும் கூர்ந்து பார்க்கவேண்டி உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள், இந்து மதத்தில் பஞ்சமர் என்ற சொல்லில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். பஞ்சமர் என்கிற பிரிவுக்குள்தான் பட்டியல்வகுப்பினர் என்றும் பட்டியல்பழங்குடியினர் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட 1900-க்கும் மேற்பட்ட உட்பிரிவு ஜாதியினர் அனைவரும் கொண்டுவரப்பட்டனர்.
இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் கருத்தின் அடிப்படையில், இந்தப் பஞ்சமர்கள் அனைவரையும் ஆதிதிராவிடர்கள் என்று பெயர் மாற்றம் செய்ய நீதிக்கட்சி அரசாணை இயற்றியது. ஆதிதிராவிடர்கள் என்றால் திராவிடர்களுக்கும் மூத்தவர்கள், திராவிடர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற பெருமை கிடைக்கும் என்பதன் அடிப்படையில், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் ஆதிதிராவிடர் என்ற சொல்லை முன்மொழிந்தனர்.
ஆனால், பஞ்சமர்களில் பறையர் என்ற பிரிவினர் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் என்ற சொல்லை ஏற்றுக்கொண்டனர். ஆனால், பிறர் அறியாமையாலும், உட்ஜாதிப் பெயர் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பியதாலும், ஆதிதிராவிடர் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், பட்டியல்வகுப்பினர் அனைவருக்கும் பொதுவான ஒரு சொல்லாக ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லைக் கருதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையை தமிழக அரசு உருவாக்கியது,
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று அம்பேத்மர் அழைக்கப்பட்டாலும், அவர் நாட்டுப் பற்றாளர். தன்னைவிட இந்த நாடு பெரியது என்று அறிவித்தவர். இந்த நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர். தான் பிறந்த, மகர் என்று அழைக்கப்படும் உட்ஜாதிப் பிரிவினருக்காக மட்டும் உழைக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்காகவும் போராடினார். அவர் காரணமில்லாமல், பட்டியல்வகுப்பினர் - பட்டியல்பழங்குடியினர் என்ற சொல்லை உருவாக்கவில்லை.
எனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள், தங்களைப் பட்டியல்வகுப்பினர் - பட்டியல்பழங்குடியினர்த் தலைவராக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, தலித் தலைவர் என்று அந்நிய மொழியில் அடையாளப்படுத்திக்கொள்வது ஏற்புடையதாக இல்லை.
இந்தியா முழுவதுக்கும், தாழ்த்தப்பட்டவர்களை ஒருங்கிணைக்க தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ‘எஸ்.சி./எஸ்.டி.’ என்ற சொல்தான் பொதுவான சொல்லாக இருக்கமுடியும் என்பதை அம்பேத்கர் ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டார். அந்தச் சொல்லுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல.
இவ்வாறு, எஸ்.சி./எஸ்.டி. என்ற சொல்லுடன் முரண்பட்டதால்தான், தலித் - ஆதிதிராவிடர் மோதல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மூன்று தலித்துகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது, ஆனால், ஆதிதிராவிடர் ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று திருமாவளவன் கோருவது ஏற்புடையதல்ல. உட்ஜாதிப் பிரிவினருக்கான கோரிக்கைகள் என்பது பட்டியல்வகுப்பினர் – பட்டியல்பழங்குடியினருக்குள் பிரிவினையையே ஏற்படுத்தும்.
ஆனால், தமிழக முதல்வரிடம் பின்வரும் கோரிக்கையை அறிவுறுத்தலாம். “தமிழக அமைச்சரவையில் பட்டியல்வகுப்பினர் - பழங்குடியினருக்கு 19 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’’.
மேற்படி கோரிக்கையைத் தமிழக அரசிடம் மட்டடுமல்லாமல், எல்லா ஆட்சியாளர்களிடமும் முன்வைப்பதற்குப் பட்டியல்வகுப்பினர் – பட்டியல்பழங்குடியினருக்கு உரிமை உண்டு.
எல்லாக் கட்சிகளிடமும் பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைக்கலாம்.
“அரசியல் கட்சிகளின் அதிகாரப் பதவிகளில் பட்டியல்வகுப்பினர் – பட்டியல்பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும்”.
“அரசியல் கட்சிகளின் அறக்கட்டளை உறுப்பினர் பதவிகளில் பட்டியல்வகுப்பினர் - பட்டியல்பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்”.
ஆளும் வர்க்கத்திலும் அரசியல் அரங்கத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்றால், மேற்படி கோரிக்கைகள் எழுப்பப்படவேண்டியவை.
இட ஒதுக்கீடு தேவையா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்டுகிறது. உட்ஜாதிப் பிரிவுகள் ஒழிக்கப்படும் வரை இடஒதுக்கீடு முறை தொடரவேண்டி உள்ளது.
தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுவதுபோன்று, முற்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டிய காலகட்டம் இது. உண்மையான சமூகநீதிக்குத் தீர்வு அப்போதுதான் எளிதில் கிடைக்கும்.
சி.சரவணன் – 9976252800; Email - senthamizhsaravanan@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.